பென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு


பென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 11 Feb 2020 4:15 AM IST (Updated: 11 Feb 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பென்னாகரம்,

பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடியபோது பழங்கால நாணயங்களை கண்டெடுத்தனர். இந்த நாணயங்களை மாணவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் முருகா, கணேசன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதை ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

இந்த நாணயங்கள் திப்பு சுல்தான், விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் பிற்கால சோழர் காலத்து நாணயங்கள் என தெரியவந்தது. மேலும் இணைய தளம் மூலம் சேகரித்த தகவலின்படி இந்த நாணயங்கள் 400 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளது.

அச்சு தொழிற்சாலை

பள்ளி வளாகத்தை ஒட்டியே ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 1509-1529 விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. விஜயநகர பேரரசிற்கு பிறகு இந்த கோவில் திப்பு சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்தது.

இதன் காரணமாக இங்கு கிடைக்க பெற்ற நாணயங்கள் விஜயநகர பேரரசர், திப்பு சுல்தான் காலத்தில் அச்சிடப்பட்ட நாணயமாக இருக்கலாம். மேலும் அதிக அளவில் நாணயங்கள் பள்ளி வளாகத்தில் கிடைத்துள்ளதால் இந்த பகுதியில் நாணய அச்சு தொழிற்சாலை இருந்திருக்கலாம். பள்ளி வளாகத்தில் இதுவரை 27 நாணயங்கள் கிடைத்துள்ளது. இந்த நாணயங்கள் பள்ளியில் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story