தலைவாசலில், 2-வது நாளாக விவசாய கண்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வம்


தலைவாசலில், 2-வது நாளாக விவசாய கண்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 11 Feb 2020 4:30 AM IST (Updated: 11 Feb 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசலில் நேற்று 2-வது நாளாக நடந்த விவசாய கண்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

தலைவாசல்,

சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியதுடன், விவசாய கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதில் கண்காட்சியை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதன்படி முதல் நாள் கண்காட்சியை விழாவிற்கு வந்திருந்த, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.

2-வது நாளாக...

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக விவசாய கண்காட்சி நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம், ஆவின், மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 224-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மேலும் சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நவீன வேளாண் கருவிகள், செயல் விளக்கங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.

வேளாண்மைத்துறை சார்பில் தானிய தேர், மாவரைக்கும் பழமையான தானிய திருகுகள் தானியங்களால் செய்யப்பட்டு காட்சி படுத்தப்பட்டு இருந்தன. இதேபோல் நடமாடும் மீன் உணவகமும், மீன் கண்காட்சியும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

காளைகள்

கால்நடை துறை சார்பில், பல்வேறு நாட்டு மாடுகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில் காங்கேயம் காளைகள், பர்கூர் மாடுகள், புலிக்குளம் மாடு, ஆலம்பாடி மாடு, உம்பளச்சேரி மாடு, சிவப்பு சிந்து பசு என்று பல்வேறு வகையான மாடுகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதேபோல் பல்வேறு வகையான ஆடுகள், கோழிகளும் கண்காட்சியில் பலரை கவர்ந்தன.

சேலம், விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வீடியோ மின்னணு வாகனங்களின் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க படக்காட்சிகளும், கால்நடை பராமரிப்பு துறை, பொதுப் பணித்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஆவின், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க கண்காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இக்கண்காட்சியில் சேலம் மண்டல கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் பல்வேறு வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

1 லட்சம் பேர்

நேற்று முன்தினம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், நேற்று சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் என இந்த கண்காட்சியை இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாகவும், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கண்காட்சி நிறைவு பெறுவதால் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் சி.ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story