குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை கவர்னர் கிரண்பெடி, நாராயணசாமிக்கு கடிதம்


குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை கவர்னர் கிரண்பெடி, நாராயணசாமிக்கு கடிதம்
x
தினத்தந்தி 11 Feb 2020 5:23 AM IST (Updated: 11 Feb 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் அனுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் என்னை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் ஆளுங்கட்சி நாளை (புதன்கிழமை) கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக விவாதிக்கவோ, தீர்மானம் நிறைவேற்றவோ புதுவை சட்டமன்றத்துக்கு யூனியன் பிரதேச சட்டப்படி அதிகாரம் இல்லை என்று சபாநாயகரிடமும் மனு கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து நான் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவது என்னவென்றால், குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் கையெழுத்திடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது புதுச்சேரிக்கும் பொருந்தும். யூனியன் பிரதேச சட்டங்களின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாம் கேள்வி எழுப்ப முடியாது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

மேலும் இந்த சட்டம் தொடர்பான பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள எந்த ஒரு பிரச்சினை தொடர்பாகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க் கள் 3 பேரும் தன்னிடம் கொடுத்த மனுவினை சட்ட ரீதியாக ஆய்வு செய்து அதன்தொடர்ச்சியாக இந்த அறிவுறுத்தல் கடிதத்தை முதல்-அமைச்சருக்கு அனுப்பியதாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

Next Story