குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் முகாம் - வனத்துறை தீவிர கண்காணிப்பு
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இதனை வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
குன்னூர்,
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காலை நேரங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் உறைபனியின் காரணமாக வறட்சியாக இருந்த வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகின்றன. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான தீவனங்கள் வளர்ந்து உள்ளன. இந்தநிலையில் உணவைத் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனப்பகுதியில் குட்டியுடன் 7 காட்டு யானைகள் வந்து முகாமிட்டு உள்ளன. இந்த காட்டு யானைகள்அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி சாலையை கடந்து செல்கின்றன.
இந்த யானைகள் கே.என்.ஆர். பகுதி அருகே இரு குழுக்களாக பிரிந்து சாலையோர வனப்பகுதியில் உலா வருகின்றன. இந்த யானைகள் சாலைக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் குன்னூர் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்குள் நுழையாமல் இருக்கவும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்ற னர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சாலையோரங்களில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. அதனால் யானைகள் ரோட்டில் நிற்பதை கண்டால் வாகன ஓட்டிகள் அதன் அருகே செல்லக்கூடாது.
குறிப்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு யானையின் அருகே சென்று, செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக்கூடாது. ஏனென்றால் யானைகள் ஆக்ரோஷம் அடையும் அபாய நிலை உள்ளது. எனவே வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது.
உடனடியாக இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story