விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி


விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2020 4:00 AM IST (Updated: 11 Feb 2020 11:36 PM IST)
t-max-icont-min-icon

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய மந்திரிகளின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் ஜாகீர் உசேன், துணைத்தலைவர்கள் கிட்டப்பா ரெட்டி, கிரு‌‌ஷ்ணன், முருகேசன், திருச்சி மாவட்ட தலைவர் மேகராஜன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகளின் வங்கி கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யாமல் இருப்பது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவிசாய்க்காமல் இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம்? என்று விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது ஒரு விவசாயி வெறுத்துபோய், எத்தனையோ போராட்டம் நடத்தி விட்டோம். இந்த அரசு ஒன்றும் செய்யாது. இனி உயிர் ஒன்றுதான் உள்ளது. போராடி பலனில்லை, என்று வேதனையுடன் கூறினார். அப்போது அய்யாக்கண்ணு, அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும். அதேபோல் நமது தொடர் போராட்டத்திற்கு வெற்றியும் நிச்சயம் கிடைக்கும் எனக்கூறினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அய்யாக்கண்ணு, நிருபர்களிடம் கூறியதாவது:-

நதிகள் இணைப்பிற்கு மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளின் நலன்கருதி, ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.5 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்திட வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களை சந்தித்து விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெறச்செய்தார். ஆனால், அதன்படி செய்யவில்லை. எனவே, சென்னையில் முதல்-அமைச்சர் வீடு முன்பு சாகும்வரை படுத்திருப்பது எனவும் தீர்மானித்துள்ளோம்.

அதே வேளையில், எங்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அது பற்றி தமிழக அரசு சட்டம் இயற்றி அரசிதழில் வெளியிட வேண்டும்.

உள்துறை மந்திரி அமித்‌ஷா விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவித்தார். ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. மாறாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் செய்துள்ளது. எனவே, இது நியாயமா? என்று கேட்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆயிரம் விவசாயிகளுடன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்‌ஷா, பியூஸ் கோயல் ஆகியோரது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஒன்று கடன் தாருங்கள். இல்லையேல் கொன்று விடுங்கள் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படும். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் காவிரி ஆற்றில் இரவு, பகலாக தங்கி, குளித்து சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story