மும்பை ஓட்டல் உரிமையாளர் கொலை: டெல்லியை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
மும்பை ஓட்டல் உரிமையாளர் கொலையில், டெல்லியை சேர்ந்தவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
மங்களூரு,
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா இரியடுக்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் காரில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த இரியடுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கார்கலாவை சேர்ந்த வசிஷ்டா யாதவ்(வயது 45) என்பதும், அவர் மும்பையில் மாயா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்ததும், அவரை யாரோ கத்தியால் குத்திக்கொலை செய்து உடலை காரில் போட்டு சென்றதும் தெரியவந்தது. அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
இந்த கொலை சம்பவம் குறித்து இரியடுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் வசிஷ்டா யாதவை கொலை செய்ததாக டெல்லியை சேர்ந்த சுமித் மிஸ்ரா, சூரத்கல்லை சேர்ந்த அப்துல் ஸாக்கூர், அவினாஷ் கர்கேரா, கார்கலா அருகே மெஜரு பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுமித் மிஸ்ரா, வசிஷ்டா யாதவின் ஓட்டலில் வேலை செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு சுமித் மிஸ்ராவை திடீரென வசிஷ்டா யாதவ் வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.
முன்விரோதம்
இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்கலாவுக்கு வந்த வசிஷ்டா யாதவை கடந்த 10-ந் தேதி 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை காரில் போட்டு சென்றது அம்பலமானது. கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கண்ட தகவலை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
Related Tags :
Next Story