போக்குவரத்து நெருக்கடி: சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
கீழக்கரையில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை போக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கீழக்கரை,
கீழக்கரை பகுதியில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை பிரதான சாலையாக உள்ளது. கடற்கரை வரை செல்லும் இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. 40 அடி அகலம் கொண்ட சாலை தற்போது இருபுறமும் ஆக்கிரமிப்பு காரணமாக 20 அடிக்கும் குறைவாக சுருங்கி விட்டது.
இதனால் வாகனங்கள் செல்லும் போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், இந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தால் பெயரளவில் ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக பெரிய கடைக்காரர்கள் வாகன செல்லும் சாலைகளில் பிளாட்பாரம் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் கூறும்போது, கீழக்கரை சீதக்காதி சாலையில் எப்போது பார்த்தாலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சாலையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள் ளது தான். சீதக்காதி சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதன்பின் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கீழக்கரையில் தற்போது பணியில் இருக்கும் ஆணையாளர் பொறுப்பு அதிகாரியாகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் முறையிட்டாலும் பெயரளவுக்கு மட்டும் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதுடன் அதனை அப்படியே விட்டு விடுகின்றனர். கீழக்கரைக்கு நிரந்தரமான நகராட்சி ஆணையாளரை நியமிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்ய முடியும். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story