மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் கைது
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு 12 இடங்களில் குண்டுகள் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவி மக்கள் 257 பேர் உயிரிழந்தனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டோங்கிரியை சேர்ந்த மூசா ஹலரி அப்துல் மஜித் (வயது57) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு பாங்காங்கிற்கு தப்பிச்சென்ற அவர் பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு குடியுரிமை பெற்று சில வருடம் அங்கு வசித்து வந்தார். இதன் பின்னர் கென்ய நாட்டிற்கு சென்று வியாபாரம் செய்து வந்தார்.
மும்பையில் கைது
மேலும் இந்தியாவுக்கு ஆயுதங்களை கடத்துவதற்கு மூளையாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில், குஜராத்தில் ரூ.175 கோடி போதைப்பொருளுடன் பாகிஸ்தானை சேர்ந்த 5 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தியதில் மும்பை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் மூசா ஹலரி அப்துல் மஜித்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் அவர் மும்பை வருவதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் குஜராத் பயங்கரவாத தடுப்புபடை போலீசார் மும்பை வந்து விமான நிலையத்தில் கண்காணித்தனர்.
அப்போது விமானத்தில் இருந்து இறங்கி வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர் விசாரணைக்காக குஜராத் கொண்டு செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story