பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்


பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2020 3:45 AM IST (Updated: 13 Feb 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர், 

பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு என்னும் உழவர் கடன் அட்டை மூலம் பயன்கள் சென்றடைய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து தகுதியான விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளித்து வருகிறது.

உழவர் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மத்திய அரசால் கடந்த 8-ந்தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த திட்ட பயனாளிகள் மற்றும் தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களின் சேமிப்பு கணக்கு உள்ள வங்கி கிளை மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உழவர் கடன் அட்டை பெற்று மானிய சலுகையுடன் வங்கி கடன் பெற்று கொள்ளலாம்.

ஏற்கனவே உழவர் கடன் அட்டை வைத்துள்ள விவசாயிகள் கடன் தொகையின் வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர் கடன் அட்டை வைத்துள்ளோர் அதை செயல்படுத்தவும் மற்றும் புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம். உழவர் கடன் அட்டைதாரர்கள் கால்நடை மற்றும் மீன் பிடிப்பதற்கான பராமரிப்பு தொகையை வரம்பில் சேர்ப்பதற்காக வங்கி கிளையை அணுகலாம்.

இத்திட்ட பயனாளிகள் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தில் தங்களது நிலம் மற்றம் பயிர் விவரங்கள் பூர்த்தி செய்து அதனுடன் வேறு எந்த வங்கி கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதி பிரமாணம் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமர்ப்பிக்கலாம்.

எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி திருவாரூர் மாவட்ட விவசாயிகள், குறிப்பாக பிரதம மந்திரியின் விவசாயி கவுரவ நிதி திட்ட பயனாளிகள் அனைவரும் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story