தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு; சாலைகளை சீரமைக்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் தக்கலையில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் திரளான நிர்வாகிகள் நேற்று காலை தக்கலையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக 3 மனுக்களை அளித்தனர்.
அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும். பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சாலைகள் சீரமைப்பு பணிக்காக கடந்த ஆண்டே ஒப்பந்தம் போடப்பட்டது. எனவே ஒப்பந்தம் போடப்பட்ட சாலைகளான திருவரம்பு– திறப்பரப்பு சாலை, பொன்மனை– குலசேகரம் சாலை, சித்திரங்கோடு– சுருளோடு சாலை உள்ளிட்ட சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்.
மேலும் அபாயகரமாக திகழும் திருவரம்பு– நாகக்கோடு சாலையை விரிவுபடுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாகர்கோவில்– களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு 1,421 விபத்துகள் ஏற்பட்டு உள்ளதாகவும், அவற்றில் 211 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் காயமடைந்த, ஊனமடைந்த நபர்களுக்கு நிவாரண தொகை மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும்.
பார்வதிபுரம்– தக்கலை இடையே உள்ள சாலையில் சுங்கான்கடை பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த பணி நடைபெறும் பகுதியில் ஒப்பந்ததாரர் மற்றும் பணி குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைப்பது அவசியம். சுங்கான்கடை குளத்தின் கரையில் நடைபெற்ற கட்டுமான பணி உள்பட குமரி மாவட்டத்தில் தற்போது வரை நடைபெற்றுள்ள கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அவற்றில் முறைகேடுகள் அல்லது ஒப்பந்த விதிமீறல்கள் இருந்தால் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.
ஊர்வலத்தில் மரிய சிசுகுமார், மணி, ஜாண் பிரைட், வர்க்கீஸ், ராஜேஷ், மோகன், ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story