மாவட்ட செய்திகள்

இன்று காதலர் தினம்: திருச்சியில் பெங்களூரு ரோஜா விற்பனை அமோகம் + "||" + Today is Valentine Day Bangalore in Trichy The sale of rose

இன்று காதலர் தினம்: திருச்சியில் பெங்களூரு ரோஜா விற்பனை அமோகம்

இன்று காதலர் தினம்: திருச்சியில் பெங்களூரு ரோஜா விற்பனை அமோகம்
காதலர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, திருச்சியில் பெங்களூரு ரோஜா விற்பனை அமோகமாக நடைபெற்றது.
திருச்சி,

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். அன்றைய தினம், இளம்ஜோடிகள் தங்கள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலை வெளிப்படுத்த விரும்புவது வழக்கம். ரோமானிய அரசனின் காலத்தில்தான் காதலர் தினம் கொண்டாட தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள்.


அந்த காலக்கட்டத்தில் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தது கிடையாது. வாழ்த்து அட்டைகள் மூலமே செய்தி அனுப்பப்பட்டு பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. அது இன்றளவும் வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை காதலர்கள் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

ஒரு காலத்தில் காதலர் தினம் வருகிறது என்றால், 10 நாட்களுக்கு முன்பே வாழ்த்து அட்டைகளை வாங்கி அவற்றை தபால் மூலம் அனுப்பும் பழக்கம் இருந்தது. தற்போது வாழ்த்து அட்டை அனுப்புவது என்பது அடியோடு மறைந்து விட்டது. காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்வதும் வெகுவாக குறைந்து விட்டது.

இன்றைய காலக்கட்டத்தில் ‘ஸ்மார்ட்’ போன்களிலேயே காதலர் தின அட்டைகள்போல தயார் செய்து அவற்றை வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளும் நவீன நிலைக்கு வந்தாகி விட்டது. இருப்பினும் காதலர்கள் சிலர் தனிமையில் சந்திக்க இடம் தேடி பூங்காக்கள், சினிமா தியேட்டர், சுற்றுலா தலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விடுகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) காதலர் தினம் ஆகும். இன்றைய தினம் பெற்றோர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளை தீவிரமாக கண்காணிப்பில் வைத்திருப்பதும் அவசியம்.

திருச்சி மாவட்டத்தில் காதலர் தினத்திற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பல்வேறு நிறங்களில் ரோஜா பூக்கள் திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளன. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, வயலட், ரோஸ் கலர் என அழகழகாக ரோஜா பூக்கள் 20 முதல் 25 எண்ணிக்கைகள் கொண்ட பெட்டியாக வந்துள்ளன. ஒரு பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஓசூர், திருச்சி மாவட்டத்தின் எட்டரை, போதாவூர் பகுதிகளில் இருந்தும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அவற்றை பலர் ஆர்வமாக வாங்கி சென்றனர். இதனால், ரோஜா பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு சுற்றுலா தலம், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, காவிரி பாலம் மற்றும் மால்கள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் காதல்ஜோடிகள் வலம் வந்து அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். எனவே, அங்கு காதலர்கள் எல்லைமீறாமல் இருக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...