போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயற்சி: மிதித்து கொல்லப்பட்டவரின் உடல் சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் மீட்பு


போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயற்சி: மிதித்து கொல்லப்பட்டவரின் உடல் சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் மீட்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 11:00 PM GMT (Updated: 14 Feb 2020 8:57 PM GMT)

மிதித்து கொல்லப்பட்டவரின் உடலை சுடுகாட்டில் எரித்த போது, பாதி எரிந்த நிலையில் பிணத்தை போலீசார் மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருமங்கலம்,

மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவிலை அடுத்துள்ள பாரபத்தி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் சுரேஷ்(வயது28). இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு போதையில் அந்த பகுதியில் சுரேஷ் தகராறில் ஈடுபட்டார். அப்போது சுரேசின் பெரியப்பா மகன் வெங்கடேஷ்(38) அங்கு வந்து தகராறு செய்த சுரேசை கண்டித்துள்ளார்.

இதில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. சுரேஷ் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டி உள்ளார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சுரேசை கீழே தள்ளி வெங்கடேஷ் காலால் மிதித்துள்ளார். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சுரேஷ் இறந்த சம்பவத்தை மறைப்பதற்காக இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். போலீசுக்கு தெரிவிக்காமல் சுரேஷ் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பாரபத்தி கிராம நிர்வாக அலுவலர் செல்விக்கு தகவல் தெரிய வந்துள்ளது. அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் சுடுகாட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு பாதி எரிந்த நிலையில் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய உறவினர்கள் முருகன், ரேவதி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story