4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் - கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்
மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
ராமநாதபுரம்,
பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை கலெக்டர் வீரராகவராவ் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,369 பாகத்தில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 307 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 69 ஆயிரத்து 193 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 59 ஆயிரத்து 421 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 60 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 11 லட்சத்து 20 ஆயிரத்து 450 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 23.12.2019 முதல் 22.01.2020 வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 848 ஆண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 252 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 101 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல 962 ஆண்கள், 1018 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,982 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களான வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களான தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் துணை கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story