சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து முஸ்லிம்கள் சாலை மறியல்
சென்னையில் முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து முஸ்லிம்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் பேகம்பூரில் நேற்று இரவு 10.30 மணிக்கு முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். இவர்களில் பெண்கள் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையிலும், ஆண்கள் திண்டுக்கல்-மதுரை சாலையிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில், போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தகவலறிந்த திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா, கிழக்கு தாசில்தார் மீனாதேவி, மேற்கு தாசில்தார் பாண்டிச்செல்வி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் கொடைக்கானல் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் சுமார் 1 மணிநேரம் சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று முஸ்லிம் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக மூஞ்சிக்கல் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்குமிங்கும் செல்லமுடியாமல் காத்துக் கிடந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
பழனியில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று இரவு 10 மணியளவில் பஸ் நிலையம் முன்பு திண்டுக்கல் ரோட்டில் சாலைமறியல் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலைமறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சாலைமறியலை கைவிட்டு முஸ்லிம் அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபோல பழனி குளத்து ரோடு ரவுண்டானா அருகேயும், ஆயக்குடியிலும் நேற்று இரவு முஸ்லிம் அமைப்பினர் சாலைமறியல் செய்தனர்.
நிலக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒன்றிய செயலாளர் தாபிக் அலி தலைமையில் முஸ்லிம் அமைப்பினர் நேற்று இரவு 10 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள திண்டுக்கல் ரோட்டில் நேற்று இரவு 10 மணியளவில் முஸ்லிம் அமைப்பினர் சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் விரைந்து சென்று முஸ்லிம் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story