தாளவாடி அருகே, ரோட்டில் நிதானமாக நடந்து சென்ற சிறுத்தை - நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தாளவாடி அருகே ரோட்டில் சிறுத்தை ஒன்று நிதானமாக நடந்து சென்றதை கண்டதும், அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாளவாடி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் வனவிலங்குகள் அவ்வப்போது தாளவாடி பகுதியில் உள்ள வனச்சாலையை கடந்து செல்கின்றன.
இந்த நிைலயில் தாளவாடியை அடுத்த தலமலையை சேர்ந்த ரமேஷ், மாதேவசாமி, மணி ஆகியோர் சொந்த வேலை விஷயமாக காரில் நேற்று முன்தினம் மதியம் தாளவாடிக்கு சென்றனர். வேலை முடிந்ததும் மீண்டும் தாளவாடியில் இருந்து தலமலைக்கு இரவு 10.30 மணி அளவில் காரில் புறப்பட்டனர்.
தாளவாடியை அடுத்த நெய்தாளபுரம் அருகே சென்றபோது ரோட்டில் ஒரு சிறுத்தை நடந்து சென்று கொண்டிருந்தது. சிறுத்தையை நேரில் கண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களுடைய காரை நிறுத்தினர்.
ஆனால் காரை கண்டு கொள்ளாமல் அந்த சிறுத்தை ரோட்டில் நிதானமாக நடந்து சென்றது. பின்னர் சிறிது நேரம் ரோட்டில் நின்றபடி அங்கும், இங்குமாக பார்த்தது. இதைத்தொடர்ந்து ரோட்டை விட்டு இறங்கி சிறுத்தை புதருக்குள் சென்று மறைந்து கொண்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் காரில் தலமலை சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனவிலங்குகள் அவ்வப்போது தாளவாடி- தலமலை ரோட்டை அடிக்கடி கடந்து செல்கின்றன. அவ்வாறு ரோட்டை கடந்து செல்லும் வனவிலங்குகளை கண்டால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தவேண்டும். வனவிலங்குகளை எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது. செல்பி எடுக்க முயலக்கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
Related Tags :
Next Story