பெற்றோரால் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை: ஒருவாரமாகியும் பிரேத பரிசோதனை செய்யப்படாத என்ஜினீயர் உடல்


பெற்றோரால் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை: ஒருவாரமாகியும் பிரேத பரிசோதனை செய்யப்படாத என்ஜினீயர் உடல்
x
தினத்தந்தி 17 Feb 2020 10:45 PM GMT (Updated: 17 Feb 2020 5:12 PM GMT)

புதுவையில் பெற்றோரால் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட என்ஜினீயரின் உடல் ஒருவாரமாகியும் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் வீராம்பட்டினம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் குமார். மீன் வியாபாரி. இவருடைய மனைவி அன்னக்கொடி. இவர்களுக்கு ரஞ்சித்குமார், செந்தில்குமார் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் என்ஜினீயர் ரஞ்சித்குமார். 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் குடியுரிமை பெற்ற பெண் அனிதாவை திருமணம் செய்து கொண்டார். செந்தில்குமார் தனது தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரத்தை கவனித்துக் கொண்டார். இந்தநிலையில் பிரான்சில் மனைவியுடன் வசித்து வந்த ரஞ்சித் குமாருக்கு சரிவர வேலை அமையவில்லை. இதனால் அவர் மட்டும் கடந்த மாதம் (ஜனவரி) புதுச்சேரிக்கு வந்தார். தினமும் குடித்து விட்டு வந்து தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து தருமாறு பெற்றோருடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 10-ந் தேதி அன்று இரவும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரஞ்சித்குமார் சொத்து தொடர்பாக மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்து மகன் என்றும் பார்க்காமல் ரஞ்சித்தை அவரது பெற்றோர் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்தனர். இதற்கு செந்தில்குமார், அவரது நண்பர் செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரின் பெற்றோர், அவரது தம்பி செந்தில்குமார், நண்பர் செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே ரஞ்சித்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஒருவாரமாகியும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. ரஞ்சித்குமாரின் மனைவி அனிதா பிரான்ஸ் நாட்டில் இருந்து வருவதில் ஏற்பட்ட சிக்கல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் புதுச்சேரி வருகிறார். இதையடுத்து ரஞ்சித்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை நடைபெற வாய்ப்பு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story