குன்னூர் அருகே, விநாயகர் கோவில் மண்டபத்துக்கு சீல் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குன்னூர் அருகே விநாயகர் கோவில் மண்டபத்துக்கு சீல் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்,
குன்னூர் அருகே அருவங்காட்டில் இருந்து ஜெகதளா செல்லும் சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் வணிக வளாகமாக பயன்படுத்தப் பட்டு வருவதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார் வந்தது.
இதையடுத்து, கோவை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா தலைமையிலான அதிகாரிகள் அந்த மண்டபத்தை சீல் வைக்க நேற்று வந்தனர்.
இதையறிந்த அருவங்காடு பகுதி பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் கோவில் மண்டபத்தை சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மண்டபத்தை சீல் வைக்கக்கூடாது என்ற ஐகோர்ட்டின் தடை உத்தரவை கோவில் கமிட்டியினர் அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
ஐகோர்ட்டின் உத்தரவை கண்ட அதிகாரிகள் மண்டபத்திற்கு சீல் வைப்பதை கைவிட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. பிறகு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் அருவங்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story