மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் முன்னாள் உள்துறை செயலாளர் கோர்ட்டில் சாட்சியம்


மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் முன்னாள் உள்துறை செயலாளர் கோர்ட்டில் சாட்சியம்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:00 PM GMT (Updated: 18 Feb 2020 6:24 PM GMT)

மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் முன்னாள் உள்துறை செயலாளர், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

திண்டுக்கல், 

கொடைக்கானல் வடகவுஞ்சி வனப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று, அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

அதில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். மேலும் 7 பேர் தப்பிவிட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 7 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ஜமுனா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் மாவோயிஸ்டுகளான கண்ணன், செண்பகவல்லி, ரீனாஜாய்ஸ்மேரி, காளிதாஸ், பகத்சிங் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதேபோல் ஜாமீனில் வெளியே இருக்கும் நீலமேகம், ரஞ்சித் ஆகியோரும் ஆஜராகினர்.

இதையடுத்து அரசு தரப்பு சாட்சியாக தமிழக முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, ஆஜராகி மாவோயிஸ்டுகள் மீதான வழக்குக்கு அனுமதி அளித்தது குறித்து 1 மணி நேரம் சாட்சியம் அளித்தார். அப்போது சட்ட விதிகளின்படி அனுமதி அளிக்கப்பட்டதா? அல்லது அரசின் அழுத்தம் காரணமாக அனுமதி வழங்கப்பட்டதா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை மாவோயிஸ்டு தரப்பு வக்கீல் கண்ணப்பன் கேட்டார்.

அதேபோல் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் வாதாடினார். இதையடுத்து மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள், வெடிகுண்டுகளை ஆய்வு செய்த வெடிபொருள் நிபுணர் ரெங்கராஜன் சாட்சியம் அளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜமுனா உத்தரவிட்டார்.

Next Story