பெல் நிறுவனத்தை கண்டித்து 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மறியல் – கடையடைப்பு


பெல் நிறுவனத்தை கண்டித்து 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மறியல் – கடையடைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 4:00 AM IST (Updated: 19 Feb 2020 7:05 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தை கண்டித்து 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை பகுதியில் 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வரும் சாலையில் பெல் நிறுவனம் சுற்றுச்சுவர் எழுப்பி பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும் மாவேரி ஓடை மற்றும் நீர்வழிப்பாதைகளையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறி பெல் நிறுவனத்தை கண்டித்து நேற்று லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம், சீக்கராஜபுரம், கத்தாரிக்குப்பம், மருதம்பாக்கம், கொண்டகுப்பம், பள்ளேரி, வசூர் உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் லாலாப்பேட்டையில் கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பயன்பாட்டில் உள்ள சாலை, கோவில், சுடுகாடு, நீர்ப்பிடிப்பு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் பெல் நிறுவனம் சுற்றுச்சுவர் அமைக்க ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வழிவகை செய்ய வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்து புளியந்தாங்கலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story