கூடலூரில் 3-வது நாளாக பாசப்போராட்டம்: குட்டியின் உடல் அருகே சோகத்துடன் நிற்கும் தாய் யானை - இரவு, பகலாக கண்காணிக்கும் வனத்துறையினர்
குட்டியின் உடல் அருகே சோகத்துடன் தாய் யானை 3-வது நாளாக நின்று வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி மற்றும் தேவர்சோலை பேரூராட்சி எல்லையான கொச்சுகுன்னு சேபட்டி பகுதியில் கடந்த 17-ந் தேதி விடியற்காலையில் காட்டு யானையின் பிளிறல் சத்தம் கேட்டவாறு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வனத்துறையினரும் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது சேற்றில் சிக்கிய நிலையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகே தாய் யானை கண்ணீருடன் நின்று கொண்டிருந்தது. தொடர்ந்து வனத்துறையினரை கண்டதும் ஆவேசம் அடைந்த தாய் யானை வேகமாக ஓடி வந்து தாக்க முயன்றது.
இதனால் வனத்துறையினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வனத்துறை வாகனத்தை சேதப்படுத்த முயன்றது. இதனால் உஷார் அடைந்த வனத்துறையினர் தொலைதூரத்தில் நின்று கண்காணித்தனர். தனியார் தேயிலை தோட்டம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனத்துக்கு இடையே பள்ளத்தாக்கான சதுப்பு நிலத்தில் உள்ள சேற்றில் குட்டி இறந்து கிடப்பதால் வனத்துறையினரால் அதன் உடலை மீட்க முடியவில்லை. மேலும் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி வனத்துறையினரும் அருகே செல்ல முடியவில்லை.
இதையொட்டி கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் ராமகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்ட வன அதிகாரிகள் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றுவதற்கு தொழிலாளர்களுக்கு தடை விதித்தனர். மேலும் பொதுமக்களும் அப்பகுதிக்கு வரக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்த நிலையில் பட்டாசு வெடித்து தாய் யானையை விரட்டினால் ஆவேசத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே குட்டி யானையின் உடலை விட்டு தாய் யானை தானாகவே அங்கிருந்து சென்ற பிறகு பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனால் இரவு, பகலாக வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் தாய் யானை அப்பகுதியில் இருந்து செல்லாமல் நேற்று 3-வது நாளாக குட்டியின் உடல் அருகே சோகத்துடன் நின்றிருந்தது.
இதனிடையே குட்டி யானையின் உடலை விட்டு தாய் யானை நிற்பதை அறிந்த கிராம மக்கள் தனியார் தேயிலை தோட்டம் வழியாக சென்று பார்வையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த வனத்துறையினர் அவர்களை துரத்தினர். சோகத்துடன் நிற்கும் காட்டு யானை கண்ணிமைக்கும் நேரத்தில் ஆவேசம் அடைந்து அனைவரையும் துரத்தி வருகிறது. இதை பொதுமக்கள் உணருவது இல்லை என சத்தம் போட்டனர்.
இதைத்தொடர்ந்து காட்டு யானை நிற்கும் இடத்துக்குள் பொதுமக்கள் வர வனத்துறையினர் தடை விதித்தனர். அவ்வாறு மீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனத்துறையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:- வனத்துறையினர் கூட குட்டி யானையின் உடல் அருகே செல்ல முடியவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகளவு அப்பகுதிக்கு வருகின்றனர். யானையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறையினர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாத வனத்தின் கரையோரம் தாய் யானை நிற்கிறது. இதை இடையூறு செய்யக்கூடாது.
பட்டாசு வெடித்து துரத்தினால் அது செல்லும் பகுதியில் உள்ள மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் குட்டியின் உடலை விட்டு தானாக செல்லும் வரை கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்பின்னரே குட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். எனவே பொதுமக்கள் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story