இந்து முன்னணி சார்பில் தாராபுரத்தில் கடைகள் அடைப்பு


இந்து முன்னணி சார்பில் தாராபுரத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 3:45 AM IST (Updated: 20 Feb 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தாராபுரம்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் சிலர் காயம் அடைந்தனர்.

போலீசாரின் தடியடி சம்பவத்தை கண்டித்து, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் தாராபுரத்தில் அன்று இரவு பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது ஒரு சிலரை தாக்கியதாகவும், அதை கண்டித்து 19-ந்தேதி தாராபுரத்தில் இந்து முன்னணி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையொட்டி தாராபுரம் நகர் பகுதியில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சில பகுதிகளில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக டி.எஸ்.கார்னர் பகுதியிலிருந்து வடதாரை, பூளவாடி பிரிவு வரை இருந்த அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தது. கடையடைப்பு போராட்டத்தால் நகர் பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயராம், தனராஜ் மேற்பார்வையில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகர் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய வீதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக அரசமரம், ஜின்னா மைதானம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. கடையடைப்பு காரணமாக நேற்று நகர் பகுதியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், தொலைதூர பஸ்பயணிகள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். தாராபுரத்தில் உள்ள 5 தியேட்டர்களிலும் நேற்று காலை, மதியம் சினிமா காட்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது. மாலை 6 மணி சினிமா காட்சி மட்டும் நடந்தது.

Next Story