திருப்பூரில் ஒரே கடையில், 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பாலிபேக் கடையில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அனுப்பர்பாளையம்,
தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டம்ளர், பேப்பர் தட்டு, பாலித்தீன் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரில் ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் பூபதி அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு பாலிபேக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பினர் மாநகராட்சி 2-வது அலுவலக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் ராமச் சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த கடையில் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர், பேப்பர் தட்டு, பாலித்தீன் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடை உரிமையாளர் குணசேகர் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story