க.பரமத்தி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்: தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியதால் சலசலப்பு உண்டானது.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிக்குமார், ஜெயந்திராணி (ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் காலை 11 மணி அளவில் தொடங்கியது. முதலில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியே நின்று கொண்டு வெற்றி பெறாத கவுன்சிலரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், இதனால் மெஜாரிட்டி இல்லாத ஒன்றிய குழுத்தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தி.மு.க. உறுப்பினர்கள் கூட்ட அரங்கிற்கு உள்ளே வந்தனர்.
அப்போது ஒன்றியக்குழு தலைவர் மார்க்கண்டேயன் உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர் கே.கருணாநிதி எழுந்து, செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி. ஆகியோர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவித்ததன்பேரில் தான் நீங்கள், இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வந்தீர்கள் என கூறினார். இதனால் ஒன்றியக்குழு தலைவருக்கும், தி.மு.க. உறுப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. உறுப்பினர், தாங்கள் வெற்றி பெற்றது உங்கள் மனசாட்சி படி பார்த்தாள் உங்களுக்கே நீங்கள் தோற்றதாக தெரியும் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் உள்ளே வந்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் தீர்மானங்களை வாசித்தார். இதனை அடுத்து தீர்மான பதிவேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கையெழுத்து போட்டனர். தி.மு.க. உறுப்பினர்கள் கையெழுத்து போடவில்லை. மேலும் தோற்றவரை ஜெயித்ததாக அறிவித்த அதிகாரிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த காவல் துறையினரையும், தமிழக அரசையும் கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் முடிந்ததாக கூறி, ஒன்றியக்குழு தலைவர் அவையை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளியேறினர். இதனால் தீர்மான பதிவேட்டில் கடைசி வரை தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் கையெழுத்து போடாமலே சென்றுவிட்டனர். இருப்பினும் கூட்டம் நடந்து முடிந்தது. கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் குழந்தைசாமி, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story