கொடுமுடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 வீடுகள் இடித்து அகற்றம்


கொடுமுடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 20 Feb 2020 9:45 PM GMT (Updated: 20 Feb 2020 5:09 PM GMT)

கொடுமுடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

கொடுமுடி, 

கொடுமுடியில் இருந்து ஆவுடையார்பாறை செல்லும் சாலையில் தன்னாசியப்பன் கோவில் அருகில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 17 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து இந்த வீடுகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு சென்று வீடுகளை அகற்றுமாறு கதவுகளில் நோட்டீஸ் ஒட்டினர். மேலும் தண்டோரா மூலமாகவும் எச்சரிக்கை விடுத்தனர். அதற்கு குடியிருப்புவாசிகள், வீடுகளை காலி செய்வதற்கு 20 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.

இந்த அவகாசம் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. ஆனால் வீடுகள் அகற்றப்படவில்லை. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் நேற்று வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் ரத்தினசாமி, உதவிப் பொறியாளர் கணேசமூர்த்தி, வருவாய் மண்டல துணைத்தாசில்தார் மரியஜோசப், வருவாய் அலுவலர் நிர்மலா தேவி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், உதவி மின் பொறியாளர் அருண் ஆகியோர் அங்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 17 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி கொடுமுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story