திருவள்ளூர் அருகே லாரி கவிழ்ந்து சாலையோரம் சிதறிய சாமந்திப்பூ போக்குவரத்து பாதிப்பு


திருவள்ளூர் அருகே   லாரி கவிழ்ந்து சாலையோரம் சிதறிய சாமந்திப்பூ   போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:45 PM GMT (Updated: 2020-02-21T01:56:31+05:30)

லாரி கவிழ்ந்து சாலையோரம் சாமந்திப்பூ சிதறியது. இதனால் அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர், 

ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து நேற்று 10 டன் சாமந்திப்பூ ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக சென்னை கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கடப்பாவை சேர்ந்த சீனிவாசன் (வயது 45) ஓட்டிச்சென்றார். கிளனராக நாகராஜ் (வயது 37) உடன் சென்றார்.

நேற்று காலை அந்த லாரி திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதை கண்ட டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

சாமந்தி பூக்கள் சிதறியது

இதில் அந்த லாரியில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 டன் சாமந்தி பூக்கள் சாலையோரம் சிதறியது. இதில் டிரைவர் மற்றும் கிளனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையோரம் சிதறி கிடந்த சாமந்திப்பூக்களை மாற்று வாகனத்தில் ஏற்றி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story