விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கொள்முதல் நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதாக புகார்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நெல் கொள் முதல் நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்,
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. விவசாய நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, துணை இயக்குனர் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:- மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறோம். நெல் கொள்முதல் நிலையங்கள் சரியான தருணத்தில் திறக்கப்படாததால் நாங்கள் வேறுவழியின்றி தனியாரிடம் மிகக்குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்தோம்.
தற்போது திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்கின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் அதிகாரிகள் கூறுவது ஒன்று, ஆனால் செய்வது ஒன்றாக உள்ளது.
கலெக்டரிடம் எந்த கட்டணமும் வாங்கமாட்டோம் என்று தெரிவித்துவிட்டு கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் செய்கின்றனர். இந்த கட்டணத்தை செலுத்த முடியாத விவசாயிகளிடம் நெல் இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை. இவ்வாறு விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். இதனால் கூட்ட அரங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கு பதிலளித்து கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். குறைந்த தொகை வழங்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. இழப்பிற்கு ஏற்ற நிவாரணம் கட்டாயம் வழங்கப்படும். மாவட்டத்தில் 22 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு உரிய பணம் அதிகபட்சம் புதன்கிழமைக்குள் வழங்கப்படும். விவசாயிகளிடம் கட்டணம் என்ற பெயரில் கட்டாய வசூல் செய்வதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.
இதற்காக தொழிலாளர்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து ரூ.26.50 வீதம் வழங்குகிறது. எனவே விவசாயிகளிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு இதுவரை வாங்கியிருந்தால் அந்த தொகையை உடனடியாக அனைவரிடமும் திருப்பி கொடுக்க வேண்டும்.
புகார் கூறப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களில் இதுதொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story