பள்ளிக்கூட சுவரை இடித்து தள்ளியது ஒற்றை யானை
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை பள்ளிக்கூட சுவரை இடித்து தள்ளியது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது பாலப்படுக்கை கிராமம். இதனால் யானைகள் அடிக்கடி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
காலால் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. அதன்பின்னர் ஊருக்குள் அங்கும் இங்குமாக பிளிறியபடி சுற்றி திரிந்தது. யானையின் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்த யானை, இதே பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது. தற்போது மீண்டும் யானை அதே பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியின் சுற்று சுவரை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் காட்டு பன்றிகள் மற்றும் சிறுத்தைகள் பள்ளி வளாகத்தில் பதுங்கி கொள்ள வாய்ப்புள்ளது’ என்றனர்.
Related Tags :
Next Story