அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களை தேனீக்கள் துரத்தி, துரத்தி கொட்டியதால் பரபரப்பு


அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களை தேனீக்கள் துரத்தி, துரத்தி கொட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2020 10:30 PM GMT (Updated: 23 Feb 2020 6:05 PM GMT)

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தேனீக்கள் துரத்தி, துரத்தி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன. இதில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுர வாசல்கள் வழியாக பக்தர்கள் உள்ளே சென்று வருவார்கள். தற்போது பே கோபுரம் மூடப்பட்டு அந்த வழியாக பக்தர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படுவது இல்லை. விசே‌‌ஷ நாட்களில் மட்டும் வி.ஐ.பி.க்கள் பே கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் வருகின்றனர். வாகனங்களில் வரும் பக்தர்கள் பெரும்பாலும் வாகனங்களை நிறுத்தி விட்டு அம்மணி அம்மன் மற்றும் திருமஞ்சன கோபுரங்களின் வழியாக தான் கோவிலுக்குள் செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர். காலை சுமார் 11 மணியளவில் அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்த தேன் கூடு திடீரென கலைந்தது. இதனால் தேனீக்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்தன. அதனால் அச்சம் அடைந்த பக்தர்கள் அந்த பகுதியில் நிற்காமல் துணிகளால் முகத்தை மறைத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். சிலர் தைரியமாக அந்த வழியாக சென்றாலும், சிலரை தேனீக்கள் துரத்தி, துரத்தி கொட்டியது. இதில் ஒரு தம்பதியை தேனீக்கள் கொட்டியதால் பக்தர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

மேலும் கோபுர வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் சிறிது நேரம் அங்கிருந்து தள்ளி நின்று கண்காணித்து கொண்டிருந்தனர். பாதுகாப்பில் இருந்த போலீசாரையும் தேனீக்கள் கொட்டியது. இதையடுத்து அம்மணி அம்மன் கோபுர வாசல் வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று கிளி கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அம்மணி அம்மன் கோபுர வாசல் சிறிதுநேரம் மூடப்பட்டது. தேனீக்கள் சுற்றுவது அடங்கிய பின்னரே அவ்வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று கடந்த 11-ந் தேதி இதே அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்தது. அந்த சமயத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று சில பக்தர்களை தேனீக்கள் கொட்டியது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் கோபுரங்களில் இருக்கும் தேன் கூடுகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story