குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 5:00 AM IST (Updated: 25 Feb 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 239 மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில், கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கந்தசாமி, விவசாய சங்க தலைவர் தங்கவேல், கடவூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி உள்பட கடவூர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், கரூர் மாவட்டத்தின் கடைகோடியில் கடவூர் தாலுகா உள்ளது. இதில் 23 வருவாய் கிராமங்கள் உள்ளன. சுமார் 250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. மொத்தம் 1½ லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாலுகாவில் பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, மாயனூர், லாலாபேட்டை, வெள்ளியணை ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் விசாரணைக்காக குளித்தலை நீதிமன்றத்திற்கு செல்கிறது.

இங்கு 200-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் நடந்து வருகிறது. மேலும் இந்த பகுதி மக்கள் நீதிமன்றத்திற்காக நீண்ட தூரம் பயணித்து குளித்தலை செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு பஸ் வசதிகள் ஏதுமில்லை. எனவே தரகம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எனவே கடவூரை மையமாக கொண்டு தரகம்பட்டியில் குற்றவியல் நடுவர் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும். ஆனால் கிரு‌‌ஷ்ணராயபுரத்தில் நீதிமன்றம் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குளித்தலை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக சென்று வர பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணராயபுரத்திற்கு நீதிமன்றம் சென்று வரவும் பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியதாகியிருக்கும். எனவே தரகம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

சுடுகாடு அமைத்து தர...

கடவூர் தாலுகா இடையப்பட்டி மேல்பாகம் கிராமத்தை சேர்ந்த குணா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கடவூரில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியை மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்சேவாப்பூரில் தனிபாதையுடன் கூடிய சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் புதுத்தெருவை சேர்ந்த ஜெயக்குமாரி அளித்த மனுவில், ஒரு தேவாலயத்துக்கு சொந்தமான வீட்டில் வாடகை கொடுத்து நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். இந்த நிலையில் வீட்டை எந்தவித முன்னறிவிப்புமின்றி இடித்து அகற்றி தரைமட்டமாக்கி விட்டனர். எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

கூட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனு அளித்த பயனாளிகளுக்கு ரூ.7,600 மதிப்பில் மூன்று சக்கர மிதிவண்டியையும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கலெக்டர் அன்பழகன் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2 பேர் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள், பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரை நுழைவு வாயிலில் சோதனை செய்த பிறகே போலீசார் உள்ளே அனுமதித்தனர். மேலும் மண்எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை யாரும் எடுத்து வருகின்றனரா? எனவும் சோதனையிட்டனர்.

இந்தநிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வடுகை பெருமாள், அரவக்குறிச்சி ஒன்றிய கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கையில் கொடியுடன் போராட்டம் நடத்தினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.

வாலிபர் தீக்குளிக்க முயற்சி

சின்னதாராபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவரும், திருச்சி மேலதேவதானத்தை சேர்ந்த அகிலாவும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சந்தோ‌‌ஷ்(3) என்கிற குழந்தை உள்ளது. இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த சரவணன், திடீரென தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதைக்கண்ட அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரிடமிருந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினார்கள். இதில் சில பெண் போலீசாரின் மீதும் மண்எண்ணெய் பட்டு விட்டது. தொடர்ந்து சரவணனை போலீசார் வேனில் அழைத்து சென்று தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் குளிக்க வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டை மீட்டு தரக்கோரி...

இதற்கிடையே சரவணனின் மனைவி அகிலா மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்து எங்களது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றனர். இது குறித்து அவர்கள் நிருபர்களிடம் தெரிவிக்கையில், சரவணன்-அகிலா சாதி மாறி திருமணம் செய்ததால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பில்லை. இதனை காரணம் காட்டி ஊரில் உள்ள சிலரது ஏற்பாட்டின்பேரில் நாங்கள் வாங்கியிருந்த வீட்டை இடித்தனர். சில காரணங்களை கூறி தற்போது குடியிருந்து வருகிற வீட்டையும் 15 நாளில் காலி செய்யுமாறு வட்டாட்சியரின் கையெழுத்திட்ட நோட்டீசு வினியோகிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் நீண்டகாலமாக வசித்து வரும் வீட்டை மீட்டுதர வேண்டும். இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும். சாதிமறுப்பு திருமணம் செய்ததால் எங்களிடம் பாரபட்சம் காட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் எங்களை குடும்பத்தோடு கருணைக்கொலை செய்யுங்கள் என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்து சென்ற னர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story