எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளை விரைவுபடுத்த முதல்-அமைச்சர் நெருக்கடி கொடுத்து வருகிறார் - அமைச்சர் உதயகுமார் பேட்டி


எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளை விரைவுபடுத்த முதல்-அமைச்சர் நெருக்கடி கொடுத்து வருகிறார் - அமைச்சர் உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 29 Feb 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளை விைரவு படுத்த மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி கொடுத்து வருவதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் வெங்கடேசன், ரவீந்திரநாத்குமார், மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அந்தந்த தொகுதி சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் வைக்கும் கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றும். மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து கோரிக்கைகளை விரைவாக பரிசீலிக்கும் அரசு அ.தி.மு.க. அரசு.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைய மத்திய அரசுக்கு தேவையான இடத்தில் சாலையை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். மின்சாரம், ெரயில் போக்குவரத்திற்கு தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம். முதலில் கட்டிடம் எழுப்ப அஸ்திவாரம் முக்கியம். அதுபோல எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதல் அடிப்படையாக உள்ளது நிலம். அதனை இந்த அரசு அடையாளம் கண்டு தேவையான இடத்தை வழங்கியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஆதாரம் பெறுவதிலும், திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அமைய முதல்-அமைச்சர் தொடர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வாழ்த்தவில்லை என்றாலும் கவலையில்லை. அவர்கள் குற்றம் குறை சொல்வதில் தான் மும்மரமாக உள்ளனர். எய்ம்ஸ் பற்றிய அறிவிப்பு கட்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் இல்லை. நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம். என்ன சட்ட அங்கீகாரமோ அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி பெறப்படும். அதன் மூலம் விரைவில் அங்கு கட்டுமான பணிகள் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story