சட்டசபை கட்சி பதவியை பிரித்தால் விலகுவேன் காங்கிரஸ் மேலிடத்திற்கு சித்தராமையா எச்சரிக்கை


சட்டசபை கட்சி பதவியை பிரித்தால் விலகுவேன் காங்கிரஸ் மேலிடத்திற்கு சித்தராமையா எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 March 2020 11:32 PM GMT (Updated: 1 March 2020 11:32 PM GMT)

சட்டசபை கட்சி பதவியை பிரித்தால் விலகுவேன் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு சித்த ராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று பின்னடைவை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இவர்கள் ராஜினாமா செய்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. டி.கே.சிவக்குமாருக்கு தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. ஆனால் அதற்கு சித்தராமையா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் மேலிட பார்வையாளராக கர்நாடகம் வந்து சென்ற மதுசூதன் மிஸ்திரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கர்நாடக காங்கிரசின் பெரும்பாலான தலைவர்கள், சட்டசபை கட்சி பதவியை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் என்று பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் 2 பதவிகளையும் தன்னிடம் வைத்துள்ள சித்தராமையா, இந்த பதவியை எக்காரணம் கொண்டும் பிரிக்கக்கூடாது என்றும், யாராக இருந்தாலும் அவை இரண்டும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் காங்கிரசின் முன்னணி தலைவர்களான கே.எச்.முனியப்பா, பி.கே.ஹரிபிரசாத், எச்.கே.பட்டீல், பரமேஸ்வர் உள்ளிட்டோர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்தியதுபோல், கர்நாடகத்தில் சட்டசபை கட்சி பதவியை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதனால் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க முடியாமல் சோனியா காந்தி திணறி வருகிறார். சித்தராமையாவை பகைத்துக் கொண்டால், கட்சியை பலப்படுத்துவது கடினமானதாகிவிடும் என்று அவர் கருதுகிறார்.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலிடம் பேசிய சித்தராமையா, “சட்டசபை கட்சி பதவியை பிரிக்க வேண்டும் என்று இப்போது பேசும் தலைவர்கள், தேர்தல் வரும்போது மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறார்கள். மற்ற நேரங்களில், நாங்கள் மூத்த தலைவர்கள் என்று வந்து கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இத்தகையோரின் கருத்தை நிராகரிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சட்டசபை கட்சி தலைவர் பதவியை பிரிக்கக்கூடாது. ஒருவேளை அந்த பதவியை பிரித்தால், கட்சியை விட்டு விலகிவிடுவேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் தற்போது கடினமான சூழ்நிலையில் இருப்பதால், சித்தராமையாவை பகைத்துக்கொள்ள சோனியா காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் நியமனம் இன்னும் ஒரு மாதம் தள்ளிப்போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பதவியை எதிர்நோக்கியுள்ள டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story