தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 2 March 2020 11:00 PM GMT (Updated: 2 March 2020 5:48 PM GMT)

தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 8 பேருக்கு ரூ.4 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், பட்டு வளர்ச்சித்துறை மூலம் மாவட்ட அளவில் சிறந்த முறையில் வெண் பட்டுக்கூடு அறுவடை செய்த 3 விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரர் குடும்பத்துக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றிய 16 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு நற் சான்றிதழ்களையும், வருவாய்த்துறையில் பணிபுரிந்து, பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களாக பணி நியமனம் உத்தரவையும், தூத்துக்குடி முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 13 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கான உதவித்தொகையும் ஆக மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்(வருவாய்) பா.வி‌‌ஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமுதா(பொது), சந்திரசேகர்(உள்ளாட்சிதேர்தல்), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story