புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது


புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 2 March 2020 11:45 PM GMT (Updated: 2 March 2020 11:45 PM GMT)

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. 15 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினார்கள்.

புதுச்சேரி,

பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. புதுவையில் இந்த தேர்வினை 32 மையங்களில் 12 ஆயிரத்து 577 மாணவ, மாணவிகளும், 579 தனித்தேர்வர்களும் எழுதினார்கள்.

காரைக்கால் மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளை சேர்ந்த 1490 மாணவ-மாணவிகளும், 13 தனியார் பள்ளிகளை சேர்ந்த 854 பேரும், தனித்தேர்வர்கள் 81 பேரும் என மொத்தம் 2425 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

சில மாணவ, மாணவிகள் காலையிலேயே கோவில்களுக்கு சென்று எழுதுபொருட்களை பூஜையில் வைத்து சாமிகும்பிட்டு விட்டு தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுதினர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வு எழுதும் அறைகளில் காப்பியடிப்பதை தவிர்க்கும் விதமாக பறக்கும் படையினர் அவ்வப்போது வந்து சோதனை நடத்தினார்கள். தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, முதன்மை கல்வி அதிகாரி அல்லி, துணை இயக்குனர் கோவிந்தராஜன் ஆகியோர் திருநள்ளாறு அரசு பள்ளி, நிர்மலாராணி பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மாற்று ஏற்பாடு

மாற்றுத்திறனாளிகள், காயமடைந்தோர் தேர்வு எழுத மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர்களுக்கு என்று நியமிக்கப்பட்டு இருந்த ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் விடைகளை சொல்லச்சொல்ல தேர்வு எழுதினார்கள்.

Next Story