கர்நாடக சட்டசபை 2-வது நாளாக முடங்கியது


கர்நாடக சட்டசபை 2-வது நாளாக முடங்கியது
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 5:18 PM GMT)

காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டதால் கர்நாடக சட்டசபை 2-வது நாளாக முடங்கியது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமியை பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கடுமையாக விமர்சித்தது குறித்து விவாதிக்க காங்கிரஸ் அனுமதி கோரியது. இதை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். இதனால் நாள் முழுவதும் சபை முடங்கியது. சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை ேநற்று காலை 11 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மதியம் 1.30 மணியளவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. காங்கிரசார் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து தர்ணா ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். பசன கவுடா பட்டீல் யத்னாலை இந்த சபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது சபாநாயகர் காகேரி பேசும்போது, “பசனகவுடா பட்டீல் யத்னால் விஷயம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்குமாறு காங்கிரஸ் கட்சி கடிதம் கொடுத்துள்ளது. நானும் அதற்கு அனுமதி வழங்கலாம் என்று நினைத்தேன். இது இந்த சபையின் உறுப்பினருக்கு எதிராக நேரடியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த உறுப்பினருக்கு நோட்டீசு அனுப்பி கருத்து கேட்காமல் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது. அதனால் இந்த சபை சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறுக்கிட்டு, “சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி விவாதிக்க அனுமதி வழங்குமாறு கேட்டோம். அந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கடிதம் கொடுங்கள், 5 நிமிடத்தில் விவாதிக்க அனுமதி வழங்குகிறோம் என்று முதல்-மந்திரி கூறினார். அதை ஏற்று நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை சற்று தளர்த்தி, உங்களிடம் கடிதம் கொடுத்துள்ளோம். மக்களின் பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட வேண்டும். மேல்-சபையில் எச்.எஸ்.துரைசாமிக்கு எதிராக பா.ஜனதா உறுப்பினர் பேசியுள்ளார். இதை கவனிக்கும்போது, சங்பரிவாருக்கு இதில் தொடர்பு இருக்கும் என்று கருத தோன்றுகிறது. இந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது” என்றார்.

சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அப்ேபாது சபாநாயகர் காகேரி பேசுகையில், “பா.ஜனதா உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னால் எந்த தவறும் செய்யவில்லை. எதிர்க்கட்சியின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டேன்” என்றார். இதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, “நாங்கள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. சபாநாயகர் ஒருதலைபட்சத்துடன் செயல்படும் மனநிலையை காட்டுகிறது. ஒட்டுமொத்த அரசும், பசனகவுடா பட்டீல் யத்னாலை ஆதரிக்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான நிலைப்பாடு ஆகும்” என்றார்.

கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதை அடுத்து சபை பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தராமையா பேசுகையில், “உங்களுக்கு அரசு அழுத்தம் கொடுத்ததால் நீங்கள் எனது தீர்மானத்தை தள்ளுபடி செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடக்க வேண்டும். பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுவரை நாங்கள் இந்த தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்” என்றார்.

Next Story