ஆசிரியர்களுக்கு இடையே பிரச்சினை: குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை
ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் பிரச்சினை காரணமாக குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு தேவாலா அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலாவில் தமிழக அரசின் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேவாலா அட்டி, கைதகொல்லி, பொன்வயல், வாழவயல், சோழவயல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், மற்றொரு ஆசிரியருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தங்களது குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்தில் வெளிநபர் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு இடையே விரோத போக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த காலத்தில் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் கல்வி தரம் நன்றாக இருந்தது.
தற்போது இந்த பிரச்சினையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் மாற்று சான்றிதழை வாங்கி கொண்டு வேறு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடிவு செய்து உள்ளோம் என்று போலீசாரிடம் பெற்றோர் தெரிவித்தனர்.
அதற்கு போலீசார், உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story