காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: திருவாரூரில், 7-ந் தேதி முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா


காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: திருவாரூரில், 7-ந் தேதி முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 3 March 2020 11:00 PM GMT (Updated: 3 March 2020 6:38 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் 7-ந் தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடக்கிறது. இதையொட்டி விழா நடை பெறும் இடத்தில் ஏற்பாடுகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

கொரடாச்சேரி,

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கில் 7-ந் தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடக்கிறது.

பாராட்டு விழா நடைபெற உள்ள இடத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை அமைச்சர் காமராஜ் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகளின் கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி தனபால் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பாதுகாப்பு அம்சங்கள்

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த அரசாணை தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியபோது இந்த அரசாணை ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர். எனவே முதல்- அமைச்சருக்கு நடைபெற உள்ள பாராட்டு விழாவில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story