ஜவுளி நிறுவனம் நிலுவைத்தொகை வழங்காமல் மோசடி நூல் உற்பத்தியாளர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


ஜவுளி நிறுவனம் நிலுவைத்தொகை வழங்காமல் மோசடி நூல் உற்பத்தியாளர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 9:39 PM GMT)

பள்ளிபாளையத்தில் ஜவுளி நிறுவனம் நிலுவைத்தொகையை வழங்காமல் மோசடி செய்து இருப்பதாக நூல் உற்பத்தியாளர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தனர்.

நாமக்கல்,

ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நூல் உற்பத்தியாளர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருட்களை பல்வேறு தேதிகளில் கடனாக கொடுத்து உள்ளோம். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையில் நிலுவைத்தொகை வரவேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் இதுவரையில் எங்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு எதிரில் உள்ள கிடங்கில், எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய ஜவுளி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவன பங்குதாரர்களிடம் சென்று கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். கிடங்கில் இருந்த பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றுகின்றனர்.

நடவடிக்கை

ஜவுளிவகை பொருட்களை விற்பனை செய்து நிலுவைத் தொகையை யாருக்கும் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நிலுவைத்தொகை அல்லது நாங்கள் கொடுத்த ஜவுளி பொருட்களை எங்கள் வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Next Story