ஊத்துக்கோட்டையில் இறுதி கட்டத்தை எட்டிய மேம்பால பணிகள்


ஊத்துக்கோட்டையில் இறுதி கட்டத்தை எட்டிய மேம்பால பணிகள்
x
தினத்தந்தி 4 March 2020 4:16 AM IST (Updated: 4 March 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ.28 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்தன.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும்.

இதை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் மீது 480 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர்.

இந்த தரைப்பாலத்தை கடந்துதான் தற்போது திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை வாழ் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் அரசு உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.28 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 450 மீட்டர் நீளத்தில் 11 மீட்டர் அகலம், 20 அடி உயரம், 21 தூண்கள் தாங்கி நிற்கும் படி மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2018-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டன.

இரவு பகலாக நடைபெற்று வரும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. ஜூன் மாதத்தில் பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story