புதுச்சேரியில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு


புதுச்சேரியில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு
x
தினத்தந்தி 3 March 2020 11:44 PM GMT (Updated: 3 March 2020 11:44 PM GMT)

தமிழகத்தில் குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு

தமிழக பகுதியிலிருந்து புதுவையிலும் ஏராளமான மக்கள் குடிநீர் கேன்களை வாங்கி வந்தனர். 20 லிட்டர் கேன் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து குடிநீர் கேன் வரத்து குறைந்துள்ளது. இதனால் புதுவையிலும் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அந்த தண்ணீரையே குடித்து பழகிவிட்ட மக்கள் வேறு வழியின்றி புதுவை அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ரூ.7 விலையில் (20 லிட்டர்) விற்கப்படும் குடிநீரை பிடித்து செல்கின்றனர்.

Next Story