காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்; கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஐ நினைவுகூரும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக ஆட்சிமொழி சட்ட வாரம் வருகிற 10-ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று மாவட்ட தொழில் மையத்தில் கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கமும், இன்று (வியாழக்கிழமை) மாவட்ட தொழில் மையத்தில் ஆட்சிமொழி மின்காட்சியுரையும், நாளை (வெள்ளிக்கிழமை) பேரூராட்சி அலுவலகக் கூட்டரங்கில் தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சியும் நடைபெறுகிறது.
வருகிற திங்கட்கிழமை கச்சபேஸ்வரர் கோவிலில் ஆட்சிமொழித் திட்ட விளக்க கூட்டமும், பிற்பகல் செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஆட்சிமொழி பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.
நிறைவாக வருகிற செவ்வாய்க்கிழமை மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும், ஜவுளிக்கடைச் சத்திரத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைக்க வலியுறுத்தி நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு பணியாளர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர்களை கொண்டு ஒருவார காலம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
தமிழ் ஆட்சிமொழிசட்ட வாரம் கொண்டாட்டத்தில் பொது மக்களும் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story