மாநிலத்தின் வளர்ச்சிதான் அரசின் நோக்கம்; எடியூரப்பா சொல்கிறார்


மாநிலத்தின் வளர்ச்சிதான் அரசின் நோக்கம்; எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 6 March 2020 12:00 AM GMT (Updated: 5 March 2020 5:03 PM GMT)

மாநிலத்தின் வளர்ச்சிதான் அரசின் முக்கிய நோக்கம் என்று பட்ஜெட் தாக்கலின்போது முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிதான் அரசின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.

அதையடுத்து அவர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அது பற்றிய விவரம் வருமாறு:-

மாநிலத்தின் பின்தங்கியுள்ள தாலுகாக்களின் வளர்ச்சிக்காக ரூ.3,060 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 6 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐதராபாத்-கர்நாடகா பகுதிகளை ‘கல்யாண கர்நாடகா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. கல்யாண கர்நாடகா பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கல்யாண கர்நாடகா வளர்ச்சி ஆணையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதில் புதிதாக மனிதவளம், விவசாயம், கலைத்துறை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. அத்துறைகள் மூலம் விவசாயம், கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், சுய தொழில், இளைஞர் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின் வளர்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரங்களை பிரித்துக் கொடுப்பதில் கர்நாடகம் நாட்டில் முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. இதுதவிர தற்போது பஞ்சாயத்து ராஜ் கமிஷன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.780 கோடி செலவில் கிராம சுமார்க் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள 20 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்படும்.

‘ஜலதாரே’ திட்டத்தின் முதல் கட்ட செயல்பாட்டின் மூலம் மண்டியா, விஜயாப்புரா மாவட்டங்கள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.700 கோடி செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் ஜல ஜீவன் மிஷன் திட்டம், மாநில அரசின் மனே மனேகே கங்கே திட்டம் ஆகியவற்றின் கீழ் கிராமப்புறங்களில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. ரூ.1,690 கோடி செலவில் 17 ஆற்றுப்படுகைகளை பலப்படுத்தவும், 20 நகரங்களில் பாதாள சாக்கடைகளை அமைக்கவும், ஒரு நகரை மாதிரி நகரமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக தற்போது ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தார்வார், பல்லாரி, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க தலா ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story