கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை


கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 5 March 2020 10:15 PM GMT (Updated: 5 March 2020 7:09 PM GMT)

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நாளை (7-ந்தேதி) வரை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து திருப்பலி, தேர் பவனி நடைபெறும். நாளை காலை வழிபாடு, திருவிழா திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதற்காக இன்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து படகுகள் மூலம் பக்தர்கள் புறப்பட்டு செல்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா மற்றும் இலங்கை பகுதிகளை சேர்ந்த இருநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏராளமானோர் பலியாகி வருவதுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் மட்டும் பரவி வந்த இந்த வைரஸ் தற்போது அங்கிருந்து பல நாடுகளுக்கும் வேகமாக பரவியதை தொடர்ந்து பலர் பலியாகி வருகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் இருநாடுகள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களில் யார் மூலமாவது இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி விடலாம் என்ற அச்சம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கிருந்து கச்சத்தீவு செல்பவர்களை முழுமையாக பரிசோதனை செய்து அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது, வழக்கமாக கச்சத்தீவு செல்பவர்கள் மருத்துவ குழுவினர் மூலம் உடல் பரிசோதனை செய்து அனுப்பப்படுவார்கள். இதன்படி 3 மருத்துவ குழுவினர் வழக்கமான பரிசோதனை பணிகளை மேற்கொள்வார்கள். இதுதவிர தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருவதால் கூடுதலாக 4 சிறப்பு மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த குழுவினர் கச்சத்தீவு செல்பவர்களை முழுமையாக பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து அனுப்பி வைப்பார்கள். அதேபோன்று திரும்பி வரும்போதும் முழுமையாக பரிசோதனை செய்து நோய் தாக்குதல் உள்ளதா? ஏதும் தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்வார்கள். இதுகுறித்து மருத்துவ குழுவினருக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story