ராமரும், இந்துத்வாவும் தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல சிவசேனா சொல்கிறது


ராமரும், இந்துத்வாவும் தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல   சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 8 March 2020 12:06 AM GMT (Updated: 8 March 2020 12:06 AM GMT)

ராமரும், இந்துத்வாவும் தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல என சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று ராமரை வழிபட்டார். உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

80 மணி நேர அரசாங்கத்தை(பா.ஜனதா) அமைத்தவர்கள் உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் 100 மணி நேரம் கூட நீடிக்காது என்று கூறிக் கொண்டு இருந்தனர்.

ஆனால் இந்த அரசாங்கம் செழித்து வளர்ந்தது மட்டுமல்லாமல், தனது செயல்திறனால் மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் அயோத்தி வருகையை வரவேற்க வேண்டும். தான் செய்த பணிகளை அவர் ராமரின் பாதங்களில் காணிக்கையாக்குகிறார்.

தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல

மராட்டியத்தில் கருத்தியல் ரீதியாக வேறுபட்ட 3 கட்சிகளின் அரசாங்கம் அரசியலமைப்பின்படி செயல்படுகிறது. இந்த பின்னணியில் உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் தொடர்பாக அவரது அரசியல் எதிரிகளால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

அரசாங்கம் யாராலும் ஆதரிக்கப்படலாம். ஆனால் சிவசேனாவும், உத்தவ் தாக்கரேயும் உள்ளேயும், வெளியேயும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றனர். கட்சியின் சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ராமரும், இந்துத் வாவும் எந்த ஒரு தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல.

அயோத்தியில் அரசியல் மற்றும் கலாசார போர் இப்போது முடிந்துவிட்டது. அயோத்தி ராமருக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க நாடு ஒரு பெரிய போரில் ஈடுபட வேண்டி இருந்தது.

அந்த போரில், பலர் முகமூடி அணிந்து இருந்தனர். ஆனால் மறைந்த சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே மட்டுமே ஒரு மலை போல் நின்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story