போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம்


போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம்
x
தினத்தந்தி 8 March 2020 10:30 PM GMT (Updated: 8 March 2020 8:44 PM GMT)

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கல்வி மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ளது நரியனூர். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கிருட்டினாபேபி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்துமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஒரத்தநாடு கல்வி மாவட்ட அதிகாரி பாலசுப்பிரமணியன், அம்மாப்பேட்டை வட்டார கல்வி அதிகாரி மணி மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிருட்டினாபேபி போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.

பணி நீக்கம்

இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்த கிருட்டினாபேபி பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தலைமை ஆசிரியை கிருட்டினாபேபி, போலி சாதிசான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்து விசாரணை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் பேரில் விசாரணை நடத்தியதில் அது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது’’என்றனர்.

Next Story