விதவையிடம் ரூ.27 கோடி மோசடி: தலைமறைவான போலி சாமியார் கைது 600 கிராம் தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்


விதவையிடம் ரூ.27 கோடி மோசடி: தலைமறைவான போலி சாமியார் கைது 600 கிராம் தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2020 10:53 PM GMT (Updated: 8 March 2020 10:53 PM GMT)

பெங்களூருவில் விதவையிடம் ரூ.27 கோடியை வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 600 கிராம் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ராமமூர்த்திநகரில் வசித்து வருபவர் கீதா. இவரது கணவர் இறந்துவிட்டார். கீதாவின் சொந்த ஊர் கோலார் மாவட்டம் ஆகும். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். கீதாவுக்கும், அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததுடன், கணவர் இறந்த பின்பு அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போது கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த சாமியாரான நாகராஜ் என்பவர், குடும்ப பிரச்சினையை தீா்க்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கீதாவிடம் கூறி இருந்தார்.

இந்த பூஜைக்காக தனக்கு சொந்தமான நிலங்களை விற்று பணம் கொடுத்ததுடன், 3 கிலோ தங்க நகைகளையும் சாமியார் நாகராஜிடம் கீதா கொடுத்திருந்தார். ஒட்டு மொத்தமாக ரூ.27 கோடியை கீதாவிடம் இருந்து வாங்கி நாகராஜ் மோசடி செய்திருந்தார். இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ், அவரது கூட்டாளிகளை தேடிவந்தனர்.

பின்னர் ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் நாகராஜ் போலி சாமியார் என்பதும், குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக கூறியும், கீதாவை மிரட்டியும் ரூ.27 கோடி நகைகள், பணத்தை வாங்கி ஏமாற்றி இருந்ததும் தெரியவந்தது. மேலும் நாகராஜின் கூட்டாளிகளான தேவராஜ், பெருமாள், மஞ்சு, சாய் கிருஷ்ணா ஆகிய 4 பேரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் போலி சாமியார் நாகராஜ் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைதான 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் போலி சாமியார் நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கீதாவிடம் ரூ.27 கோடியை வாங்கி திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். கீதாவிடம் இருந்து வாங்கிய பணத்தின் மூலம் நாகராஜ் நிறைய சொத்துக்கள் மற்றும் வீடு கட்டி இருந்ததும் தெரியவந்தது. கீதா தவிர இன்னும் பலரிடம் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக கூறி சிறப்பு பூஜை நடத்தி பணம் வாங்கி அவர் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

நாகராஜிடம் இருந்து 600 கிராம் தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story