திண்டுக்கல், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஊர்வலம்-தர்ணா


திண்டுக்கல், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஊர்வலம்-தர்ணா
x
தினத்தந்தி 9 March 2020 4:15 AM IST (Updated: 9 March 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் திண்டுக்கல்லில் ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல்,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெண்கள் அமைப்பான விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லில் ஊர்வலம் நடைபெற்றது. திப்புசுல்தான் மணிமண்டபம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனாசிர்பேகம் தலைமை தாங்கினார். நகர ஒருங்கிணைப்பாளர்கள் ஜின்னாபானு, பாத்திமா கரீம், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அப்துல்லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஊர்வலத்தை நாட்டாண்மை காஜாமைதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநில பேச்சாளர் ஹஸ்சான் உள்பட ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக பேகம்பூரை சென்றடைந்தது. இதையடுத்து அங்கு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் வத்தலக்குண்டுவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார். கணவாய்ப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் நாகூர் அனிபா வரவேற்றார். புனித தோமையர் ஆலய துணை பங்குத்தந்தை தேவசகாயம், இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நி‌ஷார் அலி, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ரகுமான் உள்பட பலர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று பேசினர். முடிவில் நகர செயலாளர் சேக் முகமது நன்றி கூறினார்.

இதேபோல் பழனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். மதனபுரத்தில் நடந்த போராட்டத்தில் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story