வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 10 March 2020 5:12 AM IST (Updated: 10 March 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

வைத்திக்குப்பம் கடற் கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் மயிலம், செஞ்சி, மேல்மலையனூர் உள்பட முக்கிய கோவில்களில் இருந்து எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

புதுச்சேரி,

புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை முதலே உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மேளதாளம் முழங்க சிறப்பு அலங்காரத்துடன் சாமிகள் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர்.

குறிப்பாக மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, காலாப்பாட்டு பாலமுருகன், கதிர்காமம் முருகன் உள்பட நூற்றுக் கணக்கான உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் கடற்கரையில் எழுந்தருளினர்.

தீர்த்தவாரியையொட்டி ஒரே நேரத்தில் பல்வேறு கோவில்களில் இருந்து கடற் கரையில் சாமிகள் எழுந்தருளியதை தரிசிக்க புதுச்சேரி மட்டுமல்லாது, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடலில் குளிக்க தடை

இதனால் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டத்தையே காண முடிந்தது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. சமூக அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. மீனவர்களுடன் இணைந்து கடலுக்குள் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக முதலுதவி சிகிச்சை மையம், காவல் கட்டுப்பாட்டு அறை போன்றவையும் அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் மற்றும் சங்கிலிபறிப்புகளை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. சாதாரண உடை அணிந்த போலீசாரும் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

கிரண்பெடி-நாராயணசாமி

மாசிமக விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் தனித்தனியாக சென்று கடற்கரையில் சாமி தரிசனம் செய்தனர்.

பிற்பகலில் தீர்த்தவாரி முடிந்து உற்சவர்கள் கடற்கரையில் இருந்து புறப்பட்டு சென்றனர். அதேநேரத்தில் மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர் உள்ளிட்ட முக்கியமான கோவில்களின் உற்சவர்கள் ஓரிரு நாட்கள் இங்கேயே பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம்

கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடவேண்டாம் என்று சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. பொதுமக்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாமி தரிசனம் செய்வதற்காக கடற்கரையில் வழக்கம்போல் திரண்டனர்.

முதல் உதவி சிகிச்சை மையத்தில் பணியில் இருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் தவிர பொதுமக்கள் உள்பட யாரும் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story