இந்தியாவின் கூட்டாட்சிக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படும் வரை போராட வேண்டும் - விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் டி.ராஜா பேச்சு


இந்தியாவின் கூட்டாட்சிக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படும் வரை போராட வேண்டும் - விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் டி.ராஜா பேச்சு
x
தினத்தந்தி 10 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-11T02:58:46+05:30)

இந்தியாவின் கூட்டாட்சிக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படும் வரை அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசினார்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:-

நாம் உயிரினும் மேலாக நேசிக்கிற நம்முடைய இந்திய நாடு தற்போது ஒரு பெரும் கொந்தளிப்போடு இருக்கிறது. அதற்கு காரணம் பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிற குடியுரிமை திருத்த சட்டம். இச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல. தலித், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழைகள் அனைவருக்கும் எதிரான சட்டம். அதனால் தான் இந்தியா முழுவதும் தங்களுடைய குடியுரிமையை, வாழ்வுரிமையை காப்பாற்றுவதற்காக மக்கள் போராடுகிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு 1947 ஜூலை மாதம், இந்தியா ஒரு குறிப்பிட்ட மதத்துக்கான நாடாக இருக்கக்கூடாது, இந்நாடு எல்லோருக்குமான நாடாக இருக்க வேண்டும் என்றுதான் காந்தி கூறியிருக்கிறார். ஆனால் காந்தியின் விருப்பத்தின்பேரில் இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக கூறுகின்றனர். காந்தியின் கருத்துக்கும், பா.ஜ.க. கூறும் கருத்துக்கும் என்ன பொருத்தம்? பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் கருவி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேலை என்னவென்றால், இந்தியாவை ஒரு மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான்.

இந்திய சமூகத்தை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். இப்பிரச்சினை முஸ்லிம்களின் பிரச்சினையாக மட்டும் இருக்கக்கூடாது, இந்து-முஸ்லிம்களின் பிரச்சினையாக மாற வேண்டும் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. இந்தியாவில் நடக்கும் ஆட்சி பாசிச ஆட்சி, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்காத ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவரிடம் மோடி, அமித்‌ஷா ஆகிய 2 பேருக்கு மட்டும் நல்ல புத்தியை கொடுங்கள் என்று நான் கேட்டிருப்பேன்.

இந்தியாவின் கூட்டாட்சி நெறிகளுக்கு எதிரான இந்த குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும். இந்த சட்டம் வாபஸ் பெறப்படும் வரை அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசியதாவது:-

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி இல்லாத ஒரே காரணத்திற்காக காவல்துறை பொறுப்பு அம்மாநில அரசிடம் இல்லை. மத்திய அரசின் வசம் உள்ளது. அப்படியானால் டெல்லி கலவரத்திற்கு முழு பொறுப்பை பா.ஜ.க. அரசுதான் ஏற்க வேண்டும். ஒருபுறம் அவர்கள் டிரம்பை வரவேற்று கொண்டிருக்கிற நிலையில் டெல்லியின் மற்றொரு பகுதியில் கலவரம் நடக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை நீதிபதி கண்டிக்கிறார். உடனடியாக அவரை வேறு மாநிலத்திற்கு மாற்றுகின்றனர். இதற்கான கையெழுத்தை நள்ளிரவு 1 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போடுகிறார். நீதிமன்றமே, மோடி, அமித்‌ஷா சொல்வதைத்தான் கேட்கிறது. நீதியை நீதிமன்றமே சாகடித்து விட்டது. நாம் வாழுகிற உரிமைக்காக போராட்டத்தை நடத்துகின்ற சூழ்நிலைக்கு வந்து விட்டோம். நாட்டை பாதுகாக்க, நாம் இந்த நாட்டை உருவாக்கியவர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

இந்த போராட்டம் இஸ்லாமிய மக்களின் போராட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வுரிமை, குடியுரிமையை காக்கிற போராட்டம். நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து அந்த ஆபத்தை தடுப்போம், தடுப்பதில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரை நாம் அனைரும் மனிதர்கள். ஆகவே மனித நேயத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பிறகு டி.ராஜா, நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசு அகந்தையோடு செயல்படாமல் ஜனநாயகத்தை மதித்து, மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இந்த சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதுவரை சட்டசபையில் தீர்மானம் போட முன்வரவில்லை. இதனால் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத அரசாக தமிழக அரசு இருக்கிறதா? அல்லது பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறதா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மோடி அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கு பதிலாக மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story