சத்தியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பகலில் நெடுஞ்சாலைகளில் குழி பறிக்க எதிர்ப்பு - மோதல் ஏற்பட்டதால் வேலை நிறுத்தப்பட்டது


சத்தியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பகலில் நெடுஞ்சாலைகளில் குழி பறிக்க எதிர்ப்பு - மோதல் ஏற்பட்டதால் வேலை நிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 11 March 2020 9:15 PM GMT (Updated: 11 March 2020 7:10 PM GMT)

சத்தியமங்கலத்தில்பாதாள சாக்கடை திட்டத்துக்காக பகலில் நெஞ்சாலைகளில் குழி பறிக்க எதிர்ப்பு ெதரிவிக்கப்பட்டது. அப்போது மோதல் ஏற்பட்டதால் வேலை நிறுத்தப்பட்டது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தில் கடந்த 2 வருடங்களாக ரூ.55 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நகரில் பல இடங்களில் குழி தோண்டப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வழக்கம்போல் பணியாளர்கள் நேற்று காலை சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் தேசிய நெடுஞ்சாலையில் பொக்லைன் எந்திரம் வைத்து குழி பறித்துக்கொண்டு இருந்தார்கள். செல்வம் (வயது 30) என்பவர் பொக்லைன் எந்திரத்தை இயக்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் லட்சுமணன் என்கிற அமாவாசை என்பவர் அங்கு வந்தார். அவர் செல்வத்திடம் சென்று பகல் நேரத்தில் ரோட்டில் குழி பறிப்பதால் போக்குவரத்து பாதிப்படைகிறது. பகலில் குழிவெட்டக்கூடாது என்று கூறினார்.

அதைக்கேட்ட செல்வம் பொக்லைன் எந்திரத்தில் இருந்து இறங்கி வந்து வேலையை நிறுத்த முடியாது எனக்கூறினார். உடனே லட்சுமணன் பொக்லைனில் ஏறி அதன் சாவியை எடுத்துக்கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சாவியை லட்சுமணன் செல்வத்திடம் கொடுத்துவிட்டார்.

ஆனாலும் அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து லட்சுமணனுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் தன்னுடைய கையில் இருந்த சாவியை தூக்கி வீசி தாக்கினார்.

அப்போது சாவி ஆட்டோ டிரைவர் ஷாகுல்ஹமீது என்பவரின் தலையில் பட்டது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

முடிவில் பொக்லைன் டிரைவர் செல்வம் வருத்தம் தெரிவித்ததால், சமரசம் அடைந்து கலைந்து சென்றார்கள். மேலும் பகலில் நெடுஞ்சாலையில் குழி பறிக்கும் வேலையும் நிறுத்தப்பட்டது.

Next Story