2020-21-ம் ஆண்டுக்கான மாநகராட்சி ‘பட்ஜெட்’ வெளியீடு திடக்கழிவு மேலாண்மைக்கு 100 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டம்


2020-21-ம் ஆண்டுக்கான மாநகராட்சி ‘பட்ஜெட்’ வெளியீடு திடக்கழிவு மேலாண்மைக்கு 100 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டம்
x
தினத்தந்தி 12 March 2020 11:00 PM GMT (Updated: 12 March 2020 9:02 PM GMT)

2020-21-ம் ஆண்டுக்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நேற்று வெளி யிடப்பட்டது. திடக்கழிவு மேலாண்மைக்கு 100 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மாநகராட்சியின் 2019-20-ம் ஆண்டிற்கான திருத்திய வரவு-செலவு திட்டம் மற்றும் 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) மாநகராட்சி தனி அலுவலரும், ஆணையருமான சிவசுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். அதை நகரப் பொறியாளர் அமுதவல்லி பெற்றுக்கொண்டார்.

பட்ஜெட் வெளியீடு நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கணக்கு) திருஞானம், செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி ஆணையர்கள் வினோத், சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட்டில் 2020-21-ம் ஆண்டில் மாநகராட்சி பொதுநிதியின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் விவரம் வருமாறு:-

புதிதாக 17 நுண் உர செயலாக்க மையம்

* சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 4 கோட்டங்களிலும், அடர்வனக்காடுகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பு. அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் தேங்கும் திடக்கழிவுகளின் அளவை குறைக்கும் பொருட்டு ஏற்கனவே 32 இடங்களில் நுண் உர செயலாக்க மையங்களுடன், புதிதாக 17 இடங்களில் நுண் உர செயலாக்க மையங்கள் (மைக்ரோ கம்போஸ்ட் சென்டர்) ரூ.8 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

* 4 கோட்டங்களிலும் சேகரமாகும் திடக்கழிவுகளை தீர்வு காணும் நோக்கில், கோட்டத்திற்கு ஒன்று வீதம் 4 திடக்கழிவு எரிப்பான்கள் ரூ.16 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். ஏற்கனவே உள்ள மாநகராட்சி பள்ளிகளில், கோட்டத்திற்கு ஒரு பள்ளிவீதம் தேர்வு செய்து நவீன வசதிகளுடன் கூடிய 4 மாதிரிப் பள்ளிகள் தலா ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் (சீர்மிகு நகரம்) மெயின்கார்டுகேட் பகுதி, காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பன்அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக் கும் பணி ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சத்திரம் பஸ் நிலைய பகுதியில் தற்காலிக தடுப்புகள் மற்றும் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கும் பணி ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

* காவிரி ஆறு கரையை மேம்படுத்தும் பணி ரூ.2 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பட்டர்வொர்த் சாலை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு மையம் மற்றும் கழிவறை கட்டும் பணி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மழைநீர் வடிகால், குறுக்கு பாலம், கால்வாய் மற்றும் தாங்கு சுவர் கட்டும் பணிக்கு ரூ.69 கோடியே 62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நந்தி கோவில் தெரு பகுதியில் தினசரி சந்தை தரைத்தள கடைகள் ரூ.98 லட்சம் மதிப்பில் கட்டப்படும்.

100 பேட்டரி வாகனங்கள்

* திடக்கழிவு மேலாண்மையின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் 100 வாகனங்கள், சாலைகளை சுத்தம் செய்யும் 2 வாகனங்கள் மற்றும் 2 கன மீட்டர் கொள்ளளவுள்ள 40 இலகு ரக வாகனங்கள் ஆகியவை ரூ.6 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டம் 1-க்கு ரூ.53 கோடியே 79 லட்சமும், திட்டம் 2-க்கு ரூ.51 கோடியே 83 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வான இடத்தில் புதைவடிகால் திட்டம் ரூ.269 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். சீர்மிகு சாலைகள் அமைக்கும் பணி (பகுதி-1, பகுதி-2) ரூ.16 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்தின் பிரதான குழாய்கள் தாங்கும் பாலத்தில், பழுதடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும். திருச்சி பஞ்சக்கரை பகுதியில் சர்.சி.வி. ராமன் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்புடைய பூங்கா அமைக்க ரூ.14 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி சாலையோரம் மற்றும் முக்கியமான இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 4 சீர்மிகு கழிப்பிடங்கள் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

உபரி

ஆக 2019-20-ம் ஆண்டுக்கான வரவினங்களுக்கான வருவாய் நிதி, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் நிதி, மூலதன நிதி, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் நகர்ப்புற சுகாதார திட்டங்களுக்கான திருத்திய திட்ட மதிப்பீடு ரூ.815 கோடியே 83 லட்சத்து 95 ஆயிரம் என்றும், செலவினங்களுக்கான திருத்திய மதிப்பீடு ரூ.815 கோடியே 6 லட்சத்து 31 ஆயிரம் என்றும், வரவு-செலவு போக உபரியாக ரூ.77 லட்சத்து 64 ஆயிரம் உள்ளது.

இதுபோல 2020-21 ம் ஆண்டுக்கான வரவினங்களுக்கான திட்ட மதிப்பீடு ரூ.1,335 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரம் என்றும், செலவினங்களுக்கான திட்ட மதிப்பீடு ரூ.1,335 கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக வரவு-செலவு போக உபரியாக ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் உள்ளது.

கல்வி நிதி

2019-20 ம் ஆண்டுக்கான வரவினங்களுக்கான கல்வி நிதி ரூ.13 கோடியே 78 லட்சமும், செலவினமாக ரூ.12 கோடியே 70 லட்சத்து 50 ஆயிரமாகவும், இவற்றில் உபரியாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது. இதுபோல 2020-21 ம் ஆண்டுக்கான வரவினங்களுக்கான கல்வி நிதி ரூ.14 கோடியே 51 லட்சமாகவும், செலவினமாக ரூ.14 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரமாகவும், இவற்றில் உபரிநிதியாக ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் உள்ளது.

Next Story